கோவில்பட்டியில் தாய்-2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டியில் தாய், 2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-10-09 17:32 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தாய், 2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்ெகாலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 43),  கூலி தொழிலாளி. இந்த தம்பதியின் மகள்கள் யுவராணி (21), நித்யா (17).

இவர்களில் யுவராணி கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நித்யா தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக முத்துமாரி கணவரை பிரிந்து தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

சொத்து பிரச்சினை

இந்த நிலையில் முத்துமாரிக்கும், அவரது சகோதரர் ஆண்டவர் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இதுகுறித்து முத்துமாரி, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் முத்துமாரியிடம் ஆண்டவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் முத்துமாரியின் வீட்டுக்கு அவரது தாயார் கோமதி வந்தார். அப்போது வீடு உள்புறமாக பூட்டிக் கிடந்தது. மேலும் துர்நாற்றம் வீசியது.

தூக்கில் பிணங்கள்

இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அப்போது ஒரு அறையில் யுவராணி, நித்யா ஆகியோரும், சமையல் அறை பகுதியில் முத்துமாரியும் தூக்கில் பிணங்களாக தொங்கியபடி கிடந்தனர். இதை பார்த்து கோமதி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

காரணம் என்ன?

விசாரணையில், முத்துமாரி உள்ளிட்ட 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இ்ச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொத்து பிரச்சினை காரணமாக 3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  2 மகள்களுடன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்