சிதம்பரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது வனத்துறையினர் நடவடிக்கை
சிதம்பரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிதம்பரம்,
கண்காணிப்பு
சிதம்பரம் அருகே வீராணம் ஏரி பகுதியில் 2 பேர் பறவைகளை வேட்டையாடி சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள அறந்தாங்கி கிராமத்தில் விற்பனை செய்து வருவதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் அஜிதா, வனக் காப்பாளர்கள் அனுசியா, சரளா ஆகியோர் கொண்ட குழுவினர் அறந்தாங்கி கிராமத்துக்கு சென்று பறவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணித்தனர்.
கொக்குகள், உடும்புகள் பறிமுதல்
அப்போது அங்கு கொக்குகள் மற்றும் உடும்புகளுடன் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த சந்திரன்(வயது 35), பாபு(45) ஆகியோர் என்பதும், வீராணம் ஏரி பகுதியில் பறவைகள் மற்றும் உடும்புகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ததாக சந்திரன், பாபு ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 வெள்ளை நிற கொக்குகள் மற்றும் 3 உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.