காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர் பணியிடை நீக்கம்

பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-10-09 15:43 GMT
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள காராச்சிகொரை போலீஸ் சோதனைச்சாவடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த காரில் 97 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த இருவரை விசாரித்தபோது அவர்களில் ஒருவர் சத்தியமங்கலம் சூழல் மேம்பாட்டு வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வரும் பெருமாள் (வயது 43), மற்றொருவர் பவானிசாகர் டாஸ்மாக் விற்பனையாளர் மூர்த்தி (46) என்பதும், 2 பேரும் பவானிசாகரில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தியதாக 2 பேர் மீதும் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 2 பேரும்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதுபற்றி அறிந்த சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி கிருபா சங்கர், காரில் மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்துக்காக வனவர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்