கூடலூர், கோத்தகிரி ஒன்றியங்களில் விறு விறு வாக்குப்பதிவு

உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி கூடலூர், கோத்தகிரி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்தது. வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர்.

Update: 2021-10-09 14:51 GMT
கூடலூர்

உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி கூடலூர், கோத்தகிரி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்தது. வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர்.

இடைத்தேர்தல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-4(மசினகுடி ஊராட்சி), வார்டு எண்-11 (சேரங்கோடு ஊராட்சி) ஆகிய 2 ஒன்றிய கவுன்சிலர்கள், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சி வார்டு எண் 6-ல் உறுப்பினர் என மொத்தம் 3 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதற்காக மசினகுடி, சேரங்கோடு ஊராட்சிகளில் தலா 6 வாக்குச்சாவடிகள், நடுஹட்டி ஊராட்சியில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. மேலும் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு

இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மசினகுடி, தர்கா ரோடு, சிவக்குமார் காலனி, அரசு மேல்நிலைப்பள்ளி, மாயார் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 786 வாக்காளர்கள் ஓட்டு போடும் வகையில் மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 

மேலும் அய்யன்கொல்லி அரசு உண்டு உறைவிட பள்ளி, காவயல் அரசு தொடக்க பள்ளியில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது.

தடுப்பூசி

முன்னதாக கை கழுவ வாக்காளர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என்று விசாரித்தனர். 

இல்லையென்றால் அங்கேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்