கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.1¼ கோடி அபராதம் வசூல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.1¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-10-09 14:51 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.1¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து அனைத்து சுற்றுலா தலங்களும் திறந்து செயல்பட்டு வருகிறது. வெளிமாநில சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

வெளிமாநில மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்க சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று கண்காணித்து அபராதம் விதிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

தலா ரூ.200 அபராதம்

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். புகைப்படம் எடுத்த பின்னர் முககவசம் அணிய வேண்டும். 

கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணியாமல் இருப்பது போன்றவற்றை கண்காணிக்க நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படும். நீலகிரியில் இதுவரை சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1.30 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்