அரசு பஸ் மீது மோதிய மயில்
வேடசந்தூர் அருகே மயில் மோதி, பஸ் கண்ணாடி உடைந்து டிரைவர் காயம் அடைந்தார்.
வேடசந்தூர்:
சேலத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த ரகுநாதன் (வயது 48) என்பவர் ஓட்டினார். கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே கணவாய்மேடு என்னுமிடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது பறந்து வந்த மயில் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அது, திடீரென பஸ் கண்ணாடி மீது மோதி விட்டு ஓடியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் பஸ் டிரைவர் ரகுநாதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. காயம் அடைந்த ரகுநாதன் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பஸ்சில் வந்த பயணிகள், அந்த வழியாக வந்த வேறு பஸ்களில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
--------