ஓட்டுப்பெட்டியை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தம்: கிராம மக்கள் 275 பேர் மீது வழக்கு

கிராம மக்கள் 275 பேர் மீது வழக்கு

Update: 2021-10-08 22:14 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ஓட்டுப்பெட்டியை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் 275 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கார் மீது தாக்குதல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாரணாபுரம் பஞ்சாயத்தில் கடந்த 6-ந் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் நாரணாபுரத்தை சேர்ந்த சண்முகத்தாய் என்ற பெண்ணும், அ.மருதப்பபுரத்தை சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு நடந்தபோது மாலையில் செல்வியின் கணவர் மணிமாறன் தனது காரில் ஆதரவாளர்களுடன் நாரணாபுரம் ஊருக்குள் சென்றார். அப்போது மர்ம நபர்கள், அவர் வந்த காரை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.
ஓட்டுப்பெட்டி
இதனால் ஆத்திரம் அடைந்த அ.மருதப்பபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், அவ்வூரில் வாக்குச்சாவடி முகவர்களாக இருந்த 6 பேரை சிறை பிடித்தனர். பதிலுக்கு நாராணாபுரம் ஊர் பொதுமக்கள் அ.மருதப்பபுரத்தை சேர்ந்த 3 வாக்குச்சாவடி முகவர்களையும், வாக்குசாவடியில் பணியாற்றிய ஊழியர்களையும் சிறை பிடித்தனர்.
மேலும் தனி பஞ்சாயத்து வேண்டி ஓட்டுப்பெட்டியை எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர்.
275 பேர் மீது வழக்கு
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் 2 ஊர்களை சேர்ந்த தலா 10 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக மண்டல தேர்தல் அதிகாரி ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நாரணாபுரம் ஊர் பொதுமக்கள் 275 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்