குமரியில் பரவலாக மழை

குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-10-08 21:03 GMT
நாகர்கோவில், 
குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் நேற்று காலையில் இருந்து மாலை வரை சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை நீடித்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
உபரிநீர் திறப்பு நிறுத்தம்
பேச்சிப்பாறை அணை- 22, பெருஞ்சாணி அணை- 22, புத்தன் அணை- 1.8, சிற்றார் 1- 2.4, சிற்றார் 2- 7, மாம்பழத்துறையாறு அணை- 6 முக்கடல் அணை- 5, பூதப்பாண்டி- 1.2, களியல்- 14.2, கன்னிமார்- 8.2, கொட்டாரம்- 9.4, குழித்துறை- 10.8, மயிலாடி- 5.2, நாகர்கோவில்- 4.6, சுருளக்கோடு- 8.4, தக்கலை- 3, குளச்சல்- 8.6, இரணியல்- 8, பாலமோர்- 13.2, ஆரல்வாய்மொழி- 3, கோழிப்போர்விளை- 8, அடையாமடை- 5, குருந்தன்கோடு- 9.8, முள்ளங்கினாவிளை- 11.2, ஆனைக்கிடங்கு- 7.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 22 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தது.
இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து இருக்கிறது. அதே சமயத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணிகள் மூடப்பட்டுள்ளது. சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணி
பேச்சிப்பாறை அணையில் இருந்து புத்தன் அணைக்கு செல்லும் 17 கி.மீ. நீளமுள்ள கோதையார் இடதுகரை கால்வாய் தூர்வாரும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணி இன்று (சனிக்கிழமை) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் பார்வையிட்டனர்
கோதையார் இடதுகரை கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். 
ஆறுகள், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் மராமத்து பணிகளை அணைகள் மூடப்படும் காலங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் அவசர கோலத்தில் தூர்வார பணிகள் மேற்கொள்ளப்படுவதால் முழுமையாக தூர்வாரும் பணி நடைபெறாது என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்