நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடியவருக்கு ஜாமீன்

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடியவருக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-10-08 20:47 GMT
மதுரை,

மதுரையைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் சூரி. இவரது சகோதரர் வீட்டு திருமண விழா கடந்த மாதம் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்தது. அங்கு 10 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்த போலீசார், இந்த விவகாரத்தில் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர்.
தற்போது சிறையில் இருக்கும் விக்னேஷ், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் மனுதாரர் இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார் என உறவினர்களான நகைக்கடைக்காரர்களோ, முக்கிய பிரமுகர்களோ உறுதியளித்தால் ஜாமீன் அளிக்கப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரரின் தந்தையும், தாத்தாவும் மனுதாரர் இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடமாட்டார் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் 60 நாட்கள் காலையும், மாலையும் மதுரை கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்