தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்
தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தஞ்சையில், அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தஞ்சையில், அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்கள், அரவை ஆலைகள், நெல் சேமிப்பு குடோன்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி தஞ்சை கீழவாசலில் உள்ள தனியார் அரவை ஆலை, அம்மன்பேட்டையில் அரசுக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை மற்றும் மடிகை, தென்னமநாடு உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல் கொள்முதல்
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தவும், முடுக்கிவிடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நான் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த அனைத்து நெல்லையும் அரசே கொள்முதல் செய்து போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வருகிறது.
45 லட்சம் டன் நெல் கொள்முதல்
கடந்தாண்டு தமிழகத்தில் நெல் கொள்முதல் 43 லட்சம் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 45 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும். கடந்தாண்டு கரும்பு சாகுபடி செய்த 1.5 லட்சம் விவசாயிகளுக்கு உரிய விலை, போதிய பணம் வழங்காத காரணத்தால், கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பெருமளவில் நெல் சாகுபடிக்கு மாறிவிட்டனர்.
இதனால் நெல் சாகுபடியின் பரப்பளவு அதிகமாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வரை கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகள் அனைவருக்கும் வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. நெல் விற்பனை செய்ய இணையவழி நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காக்க வைக்காமல் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளதால் அந்த முறை தற்போது பின்பற்றப்படவில்லை.
ஈரப்பதம் அதிகரிக்க முறையீடு
தற்போது நெல் மகசூல் அதிகமாக இருப்பதால் ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றிருந்த நடைமுறை நீக்கப்பட்டு விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நெல்லை விற்க இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது.
நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் 20 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என நானும், துறை அதிகாரிகளும் சேர்ந்து மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம். இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ரூ.40 வாங்க கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. பணியாளர்களுக்கான ஊதியம் உயர்த்துவது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேசப்பட்டுள்ளது, பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இணை இயக்குனர் சங்கீதா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.