கோவிலின் பூட்டை உடைத்து குத்து விளக்குகள் திருட்டு
விராலிமலை அருகே கோவிலின் பூட்டை உடைத்து குத்து விளக்குகளை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விராலிமலை,
விராலிமலை அருகே விராலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு நடையை சாத்தி விட்டு பூசாரி தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோவில் உள்ளே சென்று பார்த்தபோது தொங்கு விளக்கு மற்றும் 3 செட் குத்துவிளக்குகளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.