2-ம் கட்ட தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2021-10-08 17:18 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது.

2-ம் கட்ட தேர்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

2-வது கட்ட தேர்தலுக்கு மொத்தம் 469 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து பெட்டிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இதனுடன் 72 வகையான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

பணி ஆணை

வேலூர் ஒன்றியத்தில் 99 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி நேற்று ஊரீசு கல்லூரியில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான வின்சென்ட்ரமேஷ்பாபு, அலுவலர்களுக்கு தேர்தல் அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.
பயிற்சி முடிந்ததும் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் வகையில் வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் ஒன்றியத்தில் 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

அணைக்கட்டு

அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, ஜார்த்தான் கொல்லை, பாலாம் பட்டு ஆகிய 3 ஊராட்சிகள் மலைப்பகுதியில் உள்ளன. 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இந்த ஊராட்சிகளில் உள்ளது. 
தற்போது மண் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்ததில் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால். வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்கு மையத்திற்கு தேவைப்படும் உபகரணங்களை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில்  அமிர்தி வழியாக எடுத்துச் செல்லப்பட்டன. மலை கிராமங்களுக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டது. 

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கனகராஜ் மற்றும் நாகேஷ் குமார் கூறுகையில் மலை கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 8-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 300-க்கும் மேற்பட்ட போலீசார் மலை கிராமங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்