பரமத்திவேலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை-நாமக்கல் மகளிர் கோர்ட்டு உத்தரவு
பரமத்தி வேலூர் அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நாமக்கல்:
சிறுமி பலாத்காரம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் 16 வயது மகள் கடந்த 2014-ம் ஆண்டு தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவரது வயிறு பருமனாக இருப்பதை கண்டு, அந்த சிறுமியின் பெற்றோர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து உள்ளனர். அப்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, பரமத்திவேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி மகனான ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது 29) என்பவர் 16 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து மணிகண்டனின் வீட்டுக்கு சென்று சிறுமியின் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் குடும்பத்தார், சிறுமியின் குடும்பத்தாரை திட்டி, மிரட்டினர்.
20 ஆண்டு சிறை
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மணிகண்டன், இவருடைய தந்தை பொன்னுசாமி மற்றும் தாயார் லட்சுமி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சுசீலா வாதாடினார். விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மணிகண்டனின் பெற்றோர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து மணிகண்டனை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.