கோவை
ரூ.10 கோடி காசோலை மோசடி வழக்கில் தொடர்புடைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ரூ.10 கோடி காசோலை மோசடி
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முருகன். இவர் மீது சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கி கிளைக்கு 4 பேர் வந்து காசோலை ஒன்றை கொடுத்து மாற்ற முயன்ற னர். அந்த காசோலை டெல்லியில் செயல்படும் திலீப் பில்ட் கான் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்து சென்னை எழும்பூரில் உள்ள ராம்சரண் அன்ட்கோ என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.
அது ரூ.9 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரத்துக்கான காசோலை என்பதால் வங்கி மேலாளர் அமித்குமார் சந்தேகம் அடைந்தார். இதனால் அவர் அந்த காசோலையை மாற்றி கொடுக்காமல் அவர்களை காத்திருக்குமாறு கூறினார்.
4 பேர் பிடிபட்டனர்
இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் உடடினயாக காசோலையை மாற்றி தருமாறு கூறினார்கள். மேலும் அந்த காசோலையில் இருந்த கையெழுத்திலும் முரண்பாடுகள் இருந்தன.
எனவே காசோலையை கொடுத்த டெல்லி நிறுவனத்தை வங்கியின் மேலாளர் அமித்குமார் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.
அதற்கு அவர்கள் அந்த காசோலை 2018-ம் ஆண்டு கொடுத்தது என்றும், அதில் குறிப்பிட்ட ரூ.8,737 பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தனர்.
உடனே வங்கி மேலாளர் காசோலை கொடுத்த 2 பெண்கள் உள்பட 4 பேரையும் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெற்றது.
சப்-இன்ஸ்பெக்டர் கைது
கீழ்ப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், 16 பேர் கொண்ட மெகா மோசடி கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முருகன் (வயது55),
அவருடைய தோழியான கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சாவித்திரி (40) என்பவருக்கும் காசோலை மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் முருகன் 7 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு தனது தோழி சாவித்திரியுடன் சென்னைக்கு சென்று காசோலை மோசடி முயற்சிக்கு உதவி செய்துள்ளார்.
காசோலை மோசடி வெற்றி அடைந்தால் முருகனுக்கும், அவருடைய தோழிக்கும் ரூ.11 லட்சம் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். அதற்கு ஆசைப்பட்டு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அவருடைய தோழி சாவித்திரி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வந்தனர்.
பணியிடை நீக்கம்
காசோலை மோசடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உடந்தை யாக இருந்தது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு டி.ஐ.ஜி.முத்துசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.