விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 1300 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) 1,300 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் மோகன் தெரிவித்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று 100 சதவீதம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை கண்டறிந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தி அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரும் பணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் டி.மோகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1,300 இடங்களில் சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக அரசின் வழிகாட்டுதலின்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த வாரமும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் 1,300 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், வருவாய்த்துறையினர், வேளாண் துறையினர் என 3,600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
6 லட்சம் பேர்
மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். இவர்கள் அனைவருமே நாளை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே முதல் தவணை செலுத்திக்கொண்ட பலன் கிடைக்கும். இதற்காக மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் என 1 லட்சம் தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவில் இருக்கிறது. ஆகவே எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நாளைய முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக 16 லட்சத்து 46 ஆயிரம் பேர் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரத்து 246 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 2-வது தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 300 பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். இன்னும் ஒருமுறை கூட தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் 6 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை நமது மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 354 பேர் இறந்துள்ளனர். ஒருமுறை தடுப்பூசி செலுத்தியவர்கள் யாரும் இறக்கவில்லை. தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாதவர்கள் தான் இறந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, கொள்ளைநோய் தடுப்பு மருத்துவர் யோகானந்த் ஆகியோர் உடனிருந்தனர்.