புகையிலை பொருட்கள் பதுக்கிய மளிகை கடைக்காரர் கைது
பழனியில் புகையிலை பொருட்கள் பதுக்கிய மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:
பழனி காந்திரோடு பகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்கப்படுவதாக பழனி டவுன் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பழனி டவுன் போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு மூட்டைகளில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளரான பழனி இந்திராநகரை சேர்ந்த ரவி (வயது 53) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.