காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த ஆற்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 52). இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
விவசாயியான தனசேகரன் காஞ்சீபுரத்துக்கு மளிகை பொருட்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓரிக்கை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து தனசேகர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் தனசேகரன் நிலைத்தடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கி 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உத்திரமேரூர்-காஞ்சீபுரம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அங்கு வந்த காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராஜ் (33). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கியிருந்து ஒரகடம் அடுத்த வல்லம் அருகே தனியார் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வல்லம் அருகே மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பிராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.