கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சுகாதார தின விழிப்புணர்வு பேரணி
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சுகாதார தின விழிப்புணர்வு பேரணி ‘டீன்’ டாக்டர் சாந்திமலர் தலைமையில் நடந்தது.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று உலக குழந்தைகள் சுகாதார தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சாந்திமலர் தலைமையில் செவிலியர் மாணவர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள், குழந்தைகள் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். அதன்படி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் குழந்தைகளின் சுகாதாரம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து நிருபர்களிடம் டீன் டாக்டர் சாந்தி மலர் கூறியதாவது:-
குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் ஏற்படும் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், குழந்தைகள் துஷ்பிரயோகம் பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும்.
அதன்படி, அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது. குழந்தைகளை உடல் ஆரோக்கியத்துடனும், மனநல ஆரோக்கியத்துடனும் வளர்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் தொடர்பான புரிதலை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.