‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

Update: 2021-10-07 22:50 GMT
புதர் அகற்றப்படுமா?
பி.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே ரோட்டோரம் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே புதரை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வெள்ளியங்காடு.

சாலையை சீரமைக்க வேண்டும்
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிவேல், கருங்கல்பாளையம்.

தெருவிளக்கு ஒளிருமா?
சத்தியமங்கலம் திருவள்ளுவர் நகர் அருகே உள்ளது ெகஞ்சனூர். இந்த பகுதி மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு கடந்த 2 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கெஞ்சனூர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்
அந்தியூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் உள்ளது சென்னம்பட்டி. இந்த வழியாக  லாரிகள் அதிக வேகத்தில் சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஊர் எல்லைகளில் இருபுறமும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள், சென்னம்பட்டி.

குடிநீர் வசதி
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்டது பெரியசேமூர் சாத்வீக வர்ஷா நகர். எங்கள் பகுதியில் இதுநாள் வரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. ஊராட்சிக்கோட்டை திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் மேற்கொள்ளவில்லை. எனவே எங்கள் பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.மெய்யப்பன், பெரியசேமூர்

ஆபத்தான மின்கம்பம் 
டி.என்.பாளையம் காமராஜ் சாலை மூகாம்பிகை நகர் முதல் குறுக்கு தெருவில் மின்கம்பம் உள்ளது. இதில் உள்ள ஒயர்கள் மிக தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. மேலும் மின்கம்பத்தின் மேல்பகுதி சேதம் அடைந்துள்ளது. பலத்த காற்று வீசும்போது மின்ஒயர்கள் அறுந்து தொங்கி அந்த வழியாக செல்பவர்கள் மீது பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் மின்ஒயர்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மூகாம்பிகை நகர், டி.என்.பாளையம்

குப்பை கிடங்காக மாறிய குளம் 
விஜயமங்கலத்தில் மலையான்குட்டை என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. இங்கு கடைகளில் உள்ள வீண் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இது குப்பை கிடங்காக மாறியுள்ளதால்  துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புழுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விஜயமங்கலம்

பாராட்டு
மோளகவுண்டன்பாளையம் ரெயில்வே கேட் அருகே உள்ள எங்கள் தெருவில் ஊராட்சி கோட்டை குடிநீருக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து குழி மண் போட்டு சரியாக மூடப்படாமல் கிடந்தது. இதனால் குழியை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மண்ணை போட்டு குழி மூடப்பட்டு விட்டது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மோளகவுண்டன்பாளையம்.


மேலும் செய்திகள்