பாளையங்கோட்டை அருகே கிணற்றில் பிணம்: தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்

தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்

Update: 2021-10-07 21:50 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வழக்கில், தொழிலாளியின் உடலை வாங்க மறுத்தும், கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளி பிணம்
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த அலங்காரப்பேரி கீழூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் இறந்த முத்துராமலிங்கத்தின் மனைவி, உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று உடலை வாங்க மறுத்து விட்டனர். மேலும் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். 
பேச்சுவார்த்தை
இதை அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் சீவலப்பேரி போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், நெல்லை தட்சணமாற நாடார் சங்க நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
கைது செய்ய வேண்டும்
முத்துராமலிங்கம் கிணற்றில் தடுமாறி விழுந்தோ, தற்கொலை செய்தோ இறந்ததாக தெரியவில்லை. அவரை யாரோ மர்மநபர்கள் அடித்து கொலை செய்து கிணற்றுக்குள் வீசி உள்ளனர். எனவே போலீசார் இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, சரியான கோணத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்.
மேலும் 2 நாட்களுக்குள் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால், கங்கைகொண்டான்- மதுரை சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரபரப்பு 
தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்