குமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறியீடு

குமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-07 21:02 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். 
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனித்தன்மை வாய்ந்த கிராம்பு
இந்தியாவில் நறுமண பயிரான கிராம்பு அதிகமாக தமிழ்நாட்டில் தான் காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவு பகுதியிலும், கேரளா, கா்நாடகா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் வீரப்புலி இருப்பு காட்டு பகுதிகளான மாறாமலை, கரும்பாறை மற்றும் வேளிமலை பகுதிகளிலும், மகேந்திரகிரி பகுதியிலும் சுமார் 760 எக்டேர் பரப்பில் கிராம்பு பயிரிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும். நாட்டின் கிராம்பு மொத்த உற்பத்தி 1,100 டன் ஆகும். இதில் 1,000 டன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் கிராம்பு உற்பத்தியில் 65 சதவீதமான சுமார் 670 முதல் 750 டன் குமரி மாவட்டத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் மலை பகுதியில் நிலவும் தட்பவெட்பநிலை, கடலின் மூடுபனி, தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையின் அளவு மற்றும் அங்கக உரச்சத்து நிறைந்த கருமண் கிராம்பு செடிகள் செழிப்பாக வளருவதற்கு உறுதுணையாக உள்ளது. நமது நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கிராம்பு மொட்டுகளிலுள்ள வாசனை எண்ணெயின் சதவீதம் அதிகபட்சமாக காணப்படுகிறது. இதற்கு இந்த வாசனை எண்ணெயில் உள்ள யூஜினால் மற்றும் யூஜினால் அசிடேட் போன்ற வேதிபொருட்கள் அதிக அளவில் காணப்படுவதுதான் இத்தகைய மணம் மற்றும் சுவைமிகுந்த கிராம்பு நம் மாவட்டத்திற்கு தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்து பெருமை சேர்க்கிறது.
புவிசார் குறியீடு
மேலும் மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை மற்றும் 800 மீட்டர் உயரத்தில் உள்ள தோட்டங்களில் உலர வைத்தல் ஆகியவற்றால் வாசனை திரவியங்கள் குறைந்த அளவே ஆவியாகி அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது. கிராம்பு மரத்தின் பூமொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. கிராம்பு பொருட்கள் மற்றும் மொட்டுகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் வாசனை எண்ணெய்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவற்றுள் மருத்துவம், மருந்து உற்பத்தி மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் முதலியவற்றுக்கும், இந்த துறைகளில் குமரி மாவட்ட கிராம்பு பொருட்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்வதற்கு அதன் வாசனை எண்ணெய்யின் தரம் அதிகஅளவில் காணப்படுவது முக்கிய காரணமாகும். குமரி மாவட்ட பகுதியில் விளையும் கிராம்பு பொருட்களின் தரத்தை பறைசாற்றும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாறாமலை தோட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கங்களால் "கன்னியாகுமரி கிராம்பு" என புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராம்பு பொருட்களின் தரம் மற்றும் மதிப்பு பாதுகாக்கப்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்