சுகாதார கேடு
சேலம் மாவட்டம் சாத்தப்பாடி ஊராட்சியில் 3-வது வார்டு வள்ளுவர் தெருவில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடாக காட்சி அளிக்கிறது. இதனால் தெருவிலே நடக்க முடியாத நிலை உள்ளது. இதுபற்றி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பா.நிர்மலாதேவி, சாத்தப்பாடி, சேலம்.
பாலம் சரிசெய்யப்படுமா?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் முதல் குமாரபாளையம் செல்லும் வழியில் சிறிய பாலம் உள்ளது. அந்த பாலம் வழியாகத்தான் பொதுமக்களும், வாகனங்களும் சென்று வருகின்றன. அந்த பாலத்தில் சிறிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் அந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே இந்த பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.கோட்டைதங்கம், பள்ளிபாளையம், நாமக்கல்.
குப்பை தொட்டி வைக்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, உள்ளுக்குறுக்கை அருகே வன்னியபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அந்த கடைகளில் வீணாகும் கழிவு பொருட்கள் மற்றும் குப்பைகளை சாலையில் வீசுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைகள் போடுவதற்கு குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
பள்ளமான சாலை
சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் ஆபத்து ஏற்படுத்தும் விதமாக பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விழுந்து காயம் அடைகின்றனர். காந்தி மைதானம் முதல் அம்மாபேட்டை ரவுண்டானா வரை சாலையில் ஏராளமான குழிகள் உள்ளன. இந்த குழிகளால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குழிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன் ராஜ், காந்தி மைதானம், சேலம்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாநகராட்சி ஜட்ஜ் ரோட்டில் இந்திராநகர் குடியிருப்பு பெருமாள் கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்லவே பயப்படுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் துரத்தி துரத்தி இந்த நாய்கள் கடிக்கின்றன. இதனால் நோய் பரவும் அச்சம் உள்ளது. எனவே இந்த தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
-புவனேஸ்வரி, சேலம்.
முட்புதர்களை அகற்ற வேண்டும்
சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி ஊராட்சி, கணவாய்க்காடு, கொத்தனூர், சின்னையூர் பஸ் நிறுத்தம் வரை சாலையின் இரு பக்கமும் முட்புதர்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் போது வாகனங்கள் ஒன்றுக்கொன்று கடந்து செல்லும் போது முட்புதர்களால் உடலில் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த முட்புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சோமு, பெருமாம்பட்டி, சேலம்.
டாஸ்மாக் கடைகளால் மக்கள் அவதி
சேலம் ரெயில் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு அருகில் மரத்தடியில் ஆட்டோவை நிறுத்தி வைத்து ஆட்டோவிலும், தள்ளுவண்டியிலும் மது குடிக்கிறார்கள். மேலும் மதுபோதையில் தகராறில் ஈடுபடுகின்றனர். சாலையில் பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இந்த 2 டாஸ்மாக் கடைகளாலும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், சேலம்.
ஆஸ்பத்திரியில் சுற்றுச்சுவர் தேவை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா அத்தனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சுற்றுச்சுவர் இல்லாததால் நாய்களும், பன்றிகளும் அசுத்தம் செய்கின்றன. இரவு நேரங்களில் மர்ம நபர்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இ.சிகாமணி, அத்தனூர்.
சாலையில் பள்ளம்
நாமக்கல் ராமாபுரம் புதூர் மெயின்ரோடு பாவடி தெருவில் சாலை நடுவே சாக்கடை கால்வாய் மூடி இல்லாததால் அபாயகரமான குழியாக மாறி உள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த குழியால் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்செல்வன், நாமக்கல்.
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
நாமக்கல் நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்டது செம்பாளிகரடு. ராமாபுரம்புதூரில் இருந்து செம்பாளிக்கரடு செல்லும் சாலையில் இருபுறமும் மின்கம்பங்கள் உள்ளன. இதில் ஒரு மின்கம்பம் சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. காற்று வேகமாக வீசும் நேரங்களில் மின்கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். எனவே இந்த மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நாமக்கல்.
பழுதடைந்த மின்கம்பம்
கிருஷ்ணகிரி அருகே உள்ளது கந்திகுப்பம். இங்கு வரட்டனப்பள்ளி செல்லும் சாலையில் மின் கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எலும்பு கூடாக காட்சிஅளிக்கும் அந்த மின்கம்பம் எந்த நேரம் கீழே விழுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி பொதுமக்கள் உள்ளனர். தற்போது மழைக்காலமாக உள்ளதால் மின் கம்பம் சாய்ந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக பழுதடைந்த அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை பொருத்திட வேண்டும்.
-மருது, கந்திகுப்பம்.
மேம்பால பகுதியில் வேகத்தடைகள்
தர்மபுரி - பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகங்கள் சென்று வருகின்றன. இதுதவிர சர்வீஸ் ரோட்டிலும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக சர்வீஸ் ரோட்டில் மேம்பாலத்தில் ஏறுவதற்கு வாகனங்கள் விதிகளை மீறுகின்றன. இதனால் அங்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மேம்பாலத்தின் தொடக்க பகுதியிலும், முடிவு பகுதியிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
எஸ்.தவமணி, குமாரசாமிப்பேட்டை.
தெருவிளக்குகள் எரிவது இல்லை
தர்மபுரி அப்பாவு நகரில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. குறிப்பாக இந்த பகுதியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும். இங்கு தெருவிளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் வழிப்பறி உள்ளிட்ட சம்பவம் நடக்க ஏதுவாக உள்ளன. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், அப்பாவும் நகர்.