திண்டுக்கல் நாகல்நகரில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை

திண்டுக்கல் நாகல்நகரில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை நடந்தது.

Update: 2021-10-07 20:06 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகரில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை நடந்தது.
பூட்டை உடைத்து கொள்ளை 
திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு வியாபார கடைகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு மளிகை, பழம், இனிப்பு உள்பட அனைத்து வகையான கடைகளும் உள்ளன. இந்த சந்தைரோட்டில் நேற்று காலை ஒரு மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் கடையின் முன்பு உடைந்த கல்லாப்பெட்டி வீசப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கடையின் உள்ளே நுழைந்து உள்ளனர். ஆனால் கடையில் பெரிய அளவில் தொகை இல்லை. இதனால் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.200 சில்லறை காசுகளை மட்டுமே எடுத்து சென்றது தெரியவந்தது.
மேலும் 2 கடைகளில் கைவரிசை
இதற்கிடையே அதற்கு அருகே உள்ள மேலும் ஒரு மளிகை கடை மற்றும் ஒரு இனிப்பு கடையிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. அந்த 2 கடைகளிலும் மேற்கூரையின் ஓடுகளை பிரித்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இருக்கின்றனர். அதில் மளிகை கடை கடந்த சில ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் அதில் எதுவும் கொள்ளை போகவில்லை.
மேலும் இனிப்பு கடையிலும் விற்பனை பணத்தை கடைக்காரர் எடுத்து சென்று விட்டதால் ரூ.150 சில்லறை காசுகள் மட்டுமே இருந்து உள்ளன. அதை மட்டுமே கொள்ளையர்கள் எடுத்து சென்று உள்ளனர். பெரிய அளவில் பணம், பொருட்கள் கொள்ளை போகாததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காண்பித்து இருப்பது வியாபாரிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

மேலும் செய்திகள்