தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-07 19:23 GMT
புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா. பேட்டை ஊராட்சி ஒன்றியம், அஞ்சலம் ஊராட்சி, நீலியாம்பட்டி காலனிக்கு  அருகில் முசிறி- பவித்திரம் மெயின் ரோட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து  எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள், நீலியாம்பட்டி, திருச்சி. 

டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி இச்சடி கிராமத்தில்  
புதிதாக வர இருக்கும் டாஸ்மாக் கடையினால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், பெண்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் இச்சடி கிராமத்திற்கு வரவிருக்கும் டாஸ்மாக் கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
கார்த்திக், இச்சடி, புதுக்கோட்டை.

பழுதடைந்த மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் கிராமம் காந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மின்சாரம் வினியோகம் இருக்கும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஆறுமுகம், சமுத்திரம், திருச்சி.

ரேஷன் கடைகளில் பயனற்ற அரிசி வழங்குவதால் ஏழைகள் அவதி 
அரியலூர் மாவட்டம்,  புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பயன்படுத்த முடியாத அளவிற்கு அரிசி மிகவும் மோசமானதாக வருகிறது. கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்கள் பெரும்பாலும் ரேஷன் அரிசியையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் சமைத்து சாப்பிட முடியாத அளவிற்கு ரேஷன் அரிசி வழங்கப்படுவதால் அப்பகுதி ஏழை மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நல்ல அரிசி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பழனிச்சாமி, நெருஞ்சிக்கோரை, அரியலூர்.

சேவா மையக் கட்டிடம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா? 
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2014-15-ம் நிதியாண்டில் ரூ.14,43,000 மதிப்பில் ராஜீவ்காந்தி கேந்திர சேவா மையக் கட்டிடம் (வி.பி.ஆர்.சி) கட்டப்பட்டன. இந்த கட்டிடம் திறக்கப்பட்ட ஆரம்பத்தில் செங்குணம் அண்ணா நகர் பகுதிக்குரிய மிகவும் ஏழை குடும்பத்தை சார்ந்த பொதுமக்கள் சமுதாய கூடம் என்ற பெயரில் இக்கட்டத்தில் திருமணம், காதணி விழா, கரும காரியம் போன்ற பல நிகழ்ச்சிகளை ஊராட்சி மன்ற அனுமதியுடன் பொதுமக்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக  இந்த வி.பி.ஆர்.சி. கட்டிடம் திறக்கபடவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு 
கரூர் நகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட பிரம்மதீர்த்தம் ரோடு 1-வது பிரிவில் மேற்கே உள்ள சந்தில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாஸ்கரன், பிரம்மதீர்த்தம், கரூர். 

சேதமடைந்துள்ள மின் சாதன பெட்டி 
கரூர் மாவட்டம் குளித்தலை ‌வட்டம் கழுகூர் கிராம் மேலக்கம்பேஸ்வரம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரத்தில் எந்தவித அச்ச உணர்வும் இன்றி சாலையில் சென்றுவர சாலையோரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த தெருவிளக்குகளை எரிய வைக்கும் மின்சாதன பெட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் அடிக்கடி பழுதடைவதுடன், மழை பெய்யும்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடைந்து சேதடைந்துள்ள மின்சாதன பெட்டியை சரிசெய்து தர வேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேலக்கம்பேஸ்வரம், கரூர். 

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 
திருச்சி மாவட்டம், ஸ்டேட் பேங்க் காலனி 40-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளில் சேமிக்கப்படும் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஸ்டேட் பேங்க் காலனி, திருச்சி. 

திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தவும் 
திருச்சி மாநாகராட்சிக்கு  உட்பட்ட மருதாண்டாக்குறிச்சி சந்தோஷ்நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நகைகள் திருட்டு என  தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. இப்பகுதியில் பகல் நேரங்களில் பல அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரிகின்றன. இப்பகுதியில் வாழும் மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே இப்பகுதியின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா  அமைத்து  காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
க.நவமணிவேல், சந்தோஷ்நகர், திருச்சி. 

குளத்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? 
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா பாலக்குறிச்சி ஊராட்சி  ஶ்ரீரங்கம்பட்டியில்  பெரிய குளம்  உள்ளது. இந்த பெரிய குளத்தில் மழை காலத்தில் சேகரிக்கப்படும் மழைநீர் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த குளத்தில் மழைநீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நவீன் குமார்,  ஶ்ரீரங்கம்பட்டி, திருச்சி. 

வீணாகும் குடிநீர் 
 திருச்சி  மாவட்டம் திருவெறும்பூர் காவேரி நகர் 1-வது தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஒரு அடிபம்பு அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த குடிநீர் குழாயில் மூடி இல்லாததால் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காவிரி நகர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலையால் கீழே விழும் வாகன ஓட்டிகள் 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் கமலா நேரு நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மண்சாலை மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்லும்போது சேற்றுப்புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பிரசாத், காட்டூர், திருச்சி. 

மேலும் செய்திகள்