நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியை இன்று முதல் நிறுத்த முடிவு
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியை இன்று முதல் நிறுத்த, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
பல்லடம்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நிறுத்த, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டம்
பல்லடத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், செயலாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்கள் பற்றாக்குறை, உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் திருப்பூர், கோவை மாவட்டத்தில் பல கோடிரூபாய் மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளது. ஜவுளித்தொழிலை காப்பாற்ற, உற்பத்தியாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு 3 மாதத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும். அசல் தொகை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும்.
கழிவு பஞ்சு
மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழில் சீராகும் வரை கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். எனவே பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு 20 கவுண்ட் ரகம் ஒரு கிலோ நூல் விலை ரூ.120 ஆக இருந்தது. தற்போது ரூ.145 ஆக மிக கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
பஞ்சு மற்றும் நூல் விலையை ஒரே சீராக இருந்தால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலும் சீராக நடைபெறும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி துணி உற்பத்தி செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. கப்பல் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இன்று முதல் உற்பத்தி நிறுத்தம்
இந்த சூழ்நிலையில் விசைத்தறியாளர்கள் நெசவு கட்டணத்தை அதிகமாக வழங்க வலியுறுத்துவது நியாயமில்லை. எனவே நஷ்டத்தை தவிர்க்க விசைத்தறி தொழில் நிலைமை சீராகும் வரை ஜவுளி உற்பத்தியை நாளை முதல் (இன்று வெள்ளிக்கிழமை) முழுமையாக நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.