பள்ளிபாளையத்தில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும்-நகராட்சி ஆணையாளர் உத்தரவு

பள்ளிபாளையத்தில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-07 18:04 GMT
பள்ளிபாளையம்:
வெள்ளக்காடான பள்ளிபாளையம்
பள்ளிபாளையத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. விடிய, விடிய கொட்டிய இந்த மழையால் பள்ளிபாளையமே வெள்ளக்காடானது. சில வீடுகளும் இடிந்தன. இதையடுத்து அங்கு கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளும், ஆக்கிரமிப்புகளும் தான் தண்ணீர் வெளியேற முடியாமல், தேங்கி நின்றதற்கு காரணம் என கூறப்பட்டது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
உத்தரவு
இதனிடையே பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் சாக்கடை கால்வாய்களின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே அகற்ற உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளிபாளையத்தில் பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. தற்போது நகரம் வழக்கமான நிலைக்கு திரும்பிவிட்டது. சங்ககிரி ரோடு, பாலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களின் மேல் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே முன்வந்து அகற்ற வேண்டும்.
நகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது, அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் மூலம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்