டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் திமுக எம்எல்ஏ தர்ணா
திருப்பூரில் கோவில் பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் சேர்ந்து திமுக எம்எல்ஏ 6 மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் கோவில், பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் சேர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. 6 மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு பகுதி, முருகன் கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பெண்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தினார்கள்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் அந்த பகுதிக்கு ஆய்வுக்காக சென்றபோது, பெண்கள் அவரிடம் இது தொடர்பாக முறையிட்டனர். அவரும் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உயர் அதிகாரிகளிடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்த டாஸ்மாக் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து விளம்பர பதாகைகளை டாஸ்மாக் கடைக்கு முன்பு வைத்திருந்தனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா
ஆனால் நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் அந்த டாஸ்மாக் கடை செயல்பட்டது. மேலும் லாரியில் வந்த மதுபான பெட்டிகளை கடைக்குள் அடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் டாஸ்மாக் கடைக்கு காலை 10.30 மணிக்கு வந்தார். மதுபான பெட்டிகளை கடையில் இறக்குவதை நிறுத்தச்சொன்னார். இதைத் தொடர்ந்து மதுபான பெட்டிகளை இறக்காமல் லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இது குறித்து அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, கடையை மாற்ற தங்களுக்கு உத்தரவு இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார். உயர் அதிகாரிகள் உறுதி அளித்த பின்னரும் கடையை மாற்றாமல் இருப்பது குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. வாக்குவாதம் செய்தார். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு முன்பு நாற்காலி போட்டு அமர்ந்து பொதுமக்களுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்டார். டாஸ்மாக் கடையை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டன
இதைத்தொடர்ந்து கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் கடைக்குள் இருக்கும் மதுபானங்களை முழுவதுமாக காலி செய்து விட்டு கடையை மூடிய பிறகே அந்த இடத்தில் இருந்து புறப்படுவதாக எம்.எல்.ஏ. உறுதிபட தெரிவித்தார். மேலும் கடைக்கு அருகே பார் கூடத்தையும் பிரிக்குமாறு எம்.எல்.ஏ. கூறினார். உடனடியாக பாரின் சிமெண்ட் மேற்கூரையை தொழிலாளர்கள் அகற்றியதுடன், தட்டுமுட்டு சாமான்களை வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
கலால் உதவி ஆணையாளர் சுகுமார், வடக்கு தாசில்தார் ஜெகநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றால் தான் அங்கிருந்து புறப்படுவேன் என்று எம்.எல்.ஏ. கூறினார். பின்னர் மதியம் 1.30 மணி அளவில் டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் கோவிந்தராஜூலு அங்கு வந்து எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், லாரியை கொண்டு வந்து கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை ஏற்றி குடோனுக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். பின்னர் கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகள் லாரியில் ஏற்றப்பட்டன.
6½ மணி நேரம் காத்திருந்த எம்.எல்.ஏ.
இதுகுறித்து மண்டல மேலாளர் கோவிந்தராஜூலு கூறும்போது, கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடைக்குள் இருந்த மதுபான பாட்டில்கள் அனைத்தையும் ஏற்றி கடையை மூடிய பிறகு மாலை 5 மணி அளவில் செல்வராஜ் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டார்.
சுமார் 6½ மணி நேரத்துக்கும் மேலாக எம்.எல்.ஏ. அங்கு காத்திருந்தார். 10 ஆண்டு கால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர். இது குறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், இது போராட்டமல்ல, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது என்றார்.