விவசாயியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை
சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கெங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அசோகன் (வயது 45), விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன் ஆனந்தன் (50) என்பவருக்கும் அதே பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 7.9.2019 அன்று இரவு அசோகன், தனது அண்ணன் ஆனந்தனிடம் சென்று நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன், அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து தனது தம்பி என்றும் பாராமல் அசோகனின் தலையில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அசோகனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோகன் இறந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, ஆனந்தனை கைது செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.