தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:-
‘தினத்தந்தி புகார் பெட்டி’யால் தீர்வு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரிக்கோட்டை தெற்கு தெருவில் ஸகாரி அழகர் ஐயனார் கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் தாழ்வான நிலையில் மின்கம்பிகள் சென்றது. இதனை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி படத்துடன் வெளிவந்தது. இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாழ்வாக சென்ற மின் கம்பியை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி புகார் பெட்டி’க்கும், மின்வாரிய துறையினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
-திருப்பணி நண்பர்கள், காரிக்கோட்டை.
ஆபத்தான பயணம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் எந்த அரசுப்பஸ்களும் நிற்பது இல்லை இதனால் மாணவர்கள் பஸ்சின் பின்னால் ஓடுகின்றனர்.இதனை பார்த்தும் டிரைவர் பஸ்சை நிறுத்துவது இல்லை. இதனால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளிலும், பஸ் பின்னால் உள்ள இரும்புக் கம்பியிலும் தொங்கிக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.எனவே அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணவர்களின் பெற்றோர், திருவாரூர்.
குடிநீர் வசதி வேண்டும்
நாகப்பட்டினம் மாவட்டம் வடவூர் பஞ்சாயத்தில் வடக்கு தெருவில் தனியாக பத்து வீடுகள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருவேலங்கடை பஞ்சாயத்தில் இருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருகிறோம். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வடவூர் வடக்கதெரு, பொதுமக்கள்.
குளத்தில் துர்நாற்றம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தில் சத்திரம் குளம் உள்ளது. அந்தக் குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. மேலும் குளத்தின் கரையில் நடைபயிற்சி மேடை அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செய்து வந்தனர். தற்போது இந்த குளம் பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமாக மாறி உள்ளது மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்கு இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பேரளம்.
பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரி அருகில் அமைந்திருக்கும் பயணிகள் நிழலகம் மிகவும் சேதம் அடைந்து உள்ளது..கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமர போதிய இருக்கைகள் இல்லை. மேலும் நிழலகத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைநேரங்களில் மழை தண்ணீர் ஒழுகிறது இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்.
-திருவாரூர் மக்கள்.
சேறும், சகதியுமான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள கொள்ளிடம் ஒன்றியம் சரஸ்வதி விளக்கம் அருகே கொண்ணகாட்டுபடுகை உள்ளது. இதன் வழியாக கீரங்குடி செல்லும் மண்சாலை மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதன் வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ -மாணவிகள் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.
-கொள்ளிடம், பொதுமக்கள்.