தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்தது

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்தது. இதனால் மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

Update: 2021-10-07 13:40 GMT
குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்தது. இதனால் மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 

பலத்த மழை

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைரெயில் பாதை மலை பாதையாக இருப்பதால், வனப்பகுதியையொட்டி பல் சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. பருவமழை காலங்களில் தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுகின்றன. 

இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை கொட்டியது. 

நடுவழியில் நிறுத்தம்

இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹில்குரோவ்-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்தது. மேலும் மண்சரிவுடன் மரமும் விழுந்தது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதை அறியாமல் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைரெயில் வந்து கொண்டு இருந்தது. அதில் 111 சுற்றுலா பயணிகள் இருந்தனர்.

இதற்கிடையில் தண்டவாளத்தில் பாறை விழுந்து கிடப்பது குறித்து மலைரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அந்த இடத்துக்கு வரும் முன்பாகவே நடுவழியில் மலைரெயில் நிறுத்தப்பட்டது.

ஏமாற்றம்

பின்னர் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, பாறை மற்றும் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகும் என்பதால் ஊட்டிக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கல்லாறு ரெயில் நிலையத்துக்கு மலைரெயில் திரும்பி சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 4 அரசு பஸ்களில் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலைரெயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது குன்னூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைரெயில் பாதையில் சேதம் ஏற்படுகிறது. எனவே மலைரெயிலில் ஊழியர்கள் உபகரணங்களுடன் வந்து பாதையில் பாறைகள், மரங்கள் கிடந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்