நாடுகாணி தாவரவியல் பூங்காவில் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
நாடுகாணி தாவரவியல் பூங்காவில் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
கூடலூர்
நாடுகாணி தாவரவியல் பூங்காவில் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா வந்தனர். அவர்கள் மீன்கள் காட்சியகத்தை கண்டு ரசித்தனர்.
கல்வி சுற்றுலா மையம்
கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட நாடுகாணியில் தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு ஆர்க்கிட்டோரியம், நன்னீர் மீன் காட்சியகம் மற்றும் வனவிலங்குகளின் உடற்பாகங்கள் கொண்ட காட்சியகம், திசு வளர்ப்பு மையம், காட்சி முனை கோபுரம் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த கல்வி சுற்றுலா மையமாக திகழ்கிறது.
தற்போது சூழல் மேம்பாட்டுத திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவலுக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டு இருக்கிறது.
மாணவர்கள் ஆர்வம்
இந்த நிலையில் தாவரவியல் பூங்காவுக்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வர தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு, சுற்றுச்சூழலால் ஏற்படும் பயன்கள் குறித்து வனத்துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் பலர் தாவரவியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் அங்கு கொண்டாடப்படும் வன உயிரின வார விழாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கலந்துகொண்டு பூங்காவை ரசித்து செல்கின்றனர். நேற்று தேவாலா பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்களுடன் வந்து பூங்காவை ரசித்தனர்.
அழிந்து வரும் மீன்கள்
அப்போது ஆரல் மீன் காட்சியகத்துக்கு வந்த மாணவர்களை வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் வரவேற்றனர். தொடர்ந்து மீன்களின் வளர்ப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். அப்போது வனச்சரகர் பிரசாத் கூறும்போது, கூடலூர் பகுதியில் உள்ள நன்னீரில் வளரக்கூடிய மீன்கள் ரசாயன கலப்பு காரணமாக அழிந்து வருகிறது. இதனால் அழிவின் பிடியில் உள்ள மீன்களை ஆற்றுப்படுகைகளில் கண்டறிந்து அவைகளை காட்சியகத்தில் பராமரித்து வருகிறோம்.
இதேபோல் கூடலூர் பகுதியில் அழிவின் பிடியில் உள்ள தாவரங்கள், மரங்களை பூங்காவின் வனப்பகுதியில் நட்டு உயிர் சூழல் மண்டலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து வனம் குறித்த குறும்படம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
----------------------