திருச்செந்தூரில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் பாஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2021-10-07 11:14 GMT
திருச்செந்தூர்:
கோவில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்கக்கோரி திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு நேற்று பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும், தமிழக அரசு இந்து விரோத போக்கை கடைபிடித்து வருவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன், வர்த்தக அணி மாநில தலைவர் ராஜகண்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கொேரானா குறையாது 
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் வேல் பூஜை நடந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘வாரத்தில் 3 நாட்கள் கோவிலை பூட்டுவதால் கொரோனா குறையாது. இதனால் மற்ற நாட்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுகிறார்கள். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிலும் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மண்டல பொது செயலாளர் சக்திவேலன், பா.ஜனதா வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் சத்தியசீலன், செய்தி ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், விவசாய அணி மாவட்ட தலைவர் துரைராஜ் இளந்துழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் பால்ராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பா.ஜனதாவினர் பஸ்கள் வெளியேறும் வாசலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முற்றிலும் தடுப்புகளால் தடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்கள் அனைத்தும் வடக்கு பகுதியில் உள்ள வாசல் வழியாகவே உள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டம் முடியும் வரை பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
------------

மேலும் செய்திகள்