47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் 5,730 மரக்கன்றுகள் நடும் விழா - கூடுதல் டி.ஜி.பி. தொடங்கி வைத்தார்

47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் 5,730 மரக்கன்றுகள் நடும் விழாவை கூடுதல் டி.ஜி.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-07 02:34 GMT
சென்னை,

தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் சென்னை மற்றும் திருச்சி ரெயில்வே காவல் மாவட்டத்தில் உள்ள 47 ரெயில்வே போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.

இந்த நிலையில், சென்னை ராயபுரம் ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

அப்போது, ரெயில்வே ஐ.ஜி. கல்பனா நாயக், டி.ஐ.ஜி. ஜெயகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகம் முழுவதும் 47 ரெயில் நிலையங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 730 மரக்கன்றுகள் நடப்பட்டது. சென்னை காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர், சென்டிரல், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.நிகழ்ச்சியின் போது, ராயபுரம் ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் போலீசார் குடும்பத்தினரை சந்தித்த அதிகாரிகள் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த நிகழ்ச்சியில் சூப்பிரண்டு இளங்கோ உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

அதேபோல் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பில் தமிழக வனத்துறை, தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் மதுவிலக்கு போலீஸ் அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யும், ஆவடி போலீஸ் தனி அதிகாரியுமான சந்தீப்ராய் ரத்தோர் சென்னையை அடுத்த பரங்கிமலை மதுவிலக்கு வளாகத்தில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதில் மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை சூப்பிரண்டு மகிமைவீரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெரி, செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்