மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-10-07 01:36 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் மகாளய  அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

தர்மபுரி எஸ்.வி., ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வடமாலை சாத்தி சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முக கவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

இதேபோல் குப்புசெட்டிபட்டி வீரஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்