கர்நாடகத்தில் அரசு பள்ளி-கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்கள் ஆசிரியர்களாக நியமனம் - டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்கள் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதாக டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2021-10-06 21:19 GMT
பெங்களூரு:

 கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சீர்குலைந்துவிட்டது

  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கல்வி நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் தனது தொண்டர்களை அரசின் உயர்ந்த பதவிகளில் அமர வைக்க முயற்சி செய்கிறார்கள். பள்ளி-கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா பின்னணி கொண்டவர்களையே ஆசிரியர்களாக நியமனம் செய்கிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் செயல்படும் தந்திரம் ஆகும். இதை தான் நாங்கள் காவிமயம் என்கிறோம்.

  இது நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதாவினர் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள். கர்நாடகம் மட்டுமின்றி பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக அரியானா முதல்-மந்திரி மற்றும் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்மிஸ்ரா ஆகியோர் கூறிய கருத்துகளை பாருங்கள். உண்மையை எப்படி எல்லாம் திரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

விவசாயிகள் போராட்டம்

  உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது மத்திய மந்திரியின் மகன் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இதுகுறித்து உத்தரபிரதேச போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 4 ஆயிரம் பேர் இந்திய ஆட்சி பணிக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்