கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது

மகாளய அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-10-06 21:19 GMT
கன்னியாகுமரி, 
மகாளய அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. 
மகாளய அமாவாசை
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய முக்கிய விசேஷ நாட்களில் பொதுமக்கள் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். 
இந்த நாட்களில் தர்ப்பணம் கொடுக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் ஆண்டு தோறும் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் கூடுவார்கள். அதிகாலை முதலே பொதுமக்கள் அங்கு திரண்டு கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பார்கள். 
தர்ப்பணத்துக்கு தடை
கொரோனா ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் புனித நீராடவும், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
அதன் அடிப்படையில் மகாளய அமாவாசை தினத்தன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராட கடற்கரையில் பக்தர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அங்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. 
பக்தர்களை தடுத்து நிறுத்தினர்
இதனால் மகாளய அமாவாசையான நேற்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வரவில்ைல. முக்கடல் சங்கம கடற்கரை பகுதி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
மேலும், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து யாரும் செல்லாதபடி தடுப்பு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் சிலர் கடற்கரைக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் அருகே பழையாறு, சபரி அணை போன்ற நீர் நிலைகளில் சிலர் தனித்தனியாக ெசன்று தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்