திருவையாறு காவிரி ஆற்றில் குளிக்க தடை
மகாளய அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதாலும், படித்துறை பூட்டப்பட்டதாலும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
திருவையாறு:
மகாளய அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதாலும், படித்துறை பூட்டப்பட்டதாலும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
மகாளய அமாவாசை
அமாவாசைகளில் மிகவும் முக்கியமானது மகாளய அமாவாசை ஆகும். இந்த நாளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிகள் தங்களுக்கு கிடைப்பதாக நம்பிக்கை. ஒவ்வொரு மகாளய அமாவாசையின் போது ஏராளமான பொதுமக்கள் தங்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு அருகே உள்ள நீர் நிலைகளுக்குச்சென்றும், ஆறுகளுக்கு சென்றும் அதன் கரைகளில் வேத விற்பன்னர்கள் மூலம் வேத மந்திரங்களை சொல்லி தர்ப்பணம் செய்து முன்னோர்களை வணங்கி வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் மகாளய அமாவாசையான நேற்று திருவையாறு காவிரி படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்கள் ஏமாற்றம்
திருவையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் 6 படித்துறைகளிலும் தடுப்பு கட்டை அமைத்து போலீசாரும், வருவாய்த்துறையினரும், பேரூராட்சி பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புஷ்பமண்டப படித்துறை பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாமலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பினர். முன்னதாக திருவையாறு ஐயாறப்பர் கோவிலிருந்து சூலபாணி புறப்பட்டு வந்து புஷ்பமண்டப படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்று, 4 வீதி வழியாக கோவிலை சென்றடைந்தது.