ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீப்பிடித்தது; ஆவணங்கள்- பொருட்கள் எரிந்து நாசம்
திருச்சுழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீப்பிடித்தது. இதனால் அங்கு ஆவணங்கள்-பொருட்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
காரியாபட்டி
திருச்சுழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீப்பிடித்தது. இதனால் அங்கு ஆவணங்கள்-பொருட்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
தீப்பிடித்தது
திருச்சுழி அருகே கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவராக முருகன் பதவி வகித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முருகன் இறந்து போனார். துணைத்தலைவராக இருந்த மகாலட்சுமி என்பவர் தற்போது ஊராட்சி மன்றத்தலைவராக பதவி ஏற்றுள்ளார். இந்தநிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஊராட்சி மன்றக் கட்டிடத்தில் இருந்து நேற்று காலையில் புகை மண்டலமாக தெரிந்தது.
இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஊராட்சிமன்ற கட்டிடத்தில் தீ எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அதற்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.
விசாரணை
மேலும் அங்குள்ள மேஜை, சேர், கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்ற பொருட்கள் முற்றிலும் சேதமாகி விட்டன. இந்த தீவிபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.