தனது ஓட்டைவேறு நபர் போட்டதால் சர்க்கார் பட பாணியில் தபால் ஓட்டு கேட்டு பெண் போராட்டம்

தனது ஓட்டைவேறு நபர் போட்டதால் சர்க்கார் பட பாணியில் தபால் ஓட்டு கேட்டு பெண் போராட்டம்

Update: 2021-10-06 18:21 GMT
ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகண்டை கூட்டுரோடு அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நேற்று மாலை மும்பையிலிருந்து வந்த அந்தோணியம்மாள் தனது வாக்கை பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தார். ஆனால் வாக்குப்பதிவு நேரம் முடிந்துவிட்டதால் வாக்குச்சாவடி அலுவலர் அவருக்கு டோக்கன் வழங்கினார். அதைப்பெற்றுக்கொண்டு அந்தோணியம்மாள் ஒட்டுப்போட வாக்குச்சாவடி அறைக்குள் நுழைந்தார். 

அப்போது அங்கே இவரது ஓட்டை வேறு ஒருநபர் போட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணியம்மாள் சர்க்கார் படத்தில் விஜய் ஓட்டை செலுத்தியதை போல தனக்கு தபால் வாக்கு வேண்டும் என கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் கொடுக்கப்பட்டு அவருடைய அடையாள அட்டையை வாக்காளர் பதிவேட்டில் ஒப்பிட்டுப் பார்த்தபோது வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த எண்ணும் வாக்காளர் பதிவேட்டில் இருந்த எண்ணும் வெவ்வேறாக இருந்ததால் வாக்குச்சாவடி அலுவலர் வாக்கு சீட்டு தர மறுத்துவிட்டார். 

இதையடுத்து இந்த வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தான் நான் தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். எனவே எனக்கு வாக்கு வேண்டும் என கூறி சுமார் 20 நிமிடங்கள் வாக்குச்சாவடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குப் பெட்டியை சீல் வைக்கும் பணி தாமதமானது. பின்னர் பகண்டை கூட்ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோலை அந்தோணி அம்மாளுடன் பேசி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு தபால் வாக்கு பெற்று வாக்களிக்க கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக மும்பையில் இருந்து ஆர்வத்துடன் வந்த அந்தோணி அம்மாளின் ஓட்டை வேறுநபர் போட்டு விட்டு சென்றதால் தனது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் மனவேதனையோடு அங்கிருந்து திரும்பி சென்றார்.

மேலும் செய்திகள்