செஞ்சி அருகே பொன்னங்குப்பத்தில் தேர்தல் புறக்கணிப்பு

செஞ்சி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தில் ஒருவர் கூட வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.

Update: 2021-10-06 18:02 GMT
செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள் உள்ளன. இதில் 2 ஊராட்சி தலைவர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 58 ஊராட்சி மன்ற தலைவர் பதவி, 24 ஒன்றியக்குழு உறுப்பினர், 2 மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 710 பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 

காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்கள் வாக்கை பதிவு செய்தனர். செஞ்சி நரசிங்கன்பேட்டை, பொன்பத்தி, பள்ளிபட்டு, சின்னபொன்னம்பூண்டி, ஆலம்பூண்டி, சோ.குப்பம், கணக்கன்குப்பம் உள்பட 58 ஊராட்சிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

யாரும் வாக்களிக்கவில்லை

இந்நிலையில் செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும், இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் ஏற்கனவே அறிவித்தப்படி நேற்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 
1,396 வாக்காளர்களை கொண்ட பொன்னங்குப்பம் கிராமத்தில் வாக்களிப்பதற்கு வசதியாக 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். மேலும் காலை 7 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்காளர்கள்  யாரும் வாக்களிக்க வரவில்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டியை பூட்டி ‘சீல்’ வைத்தனர். முன்னதாக அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

இதற்கிடையே செஞ்சி ஒன்றியம் ஒட்டம்பட்டு கிராமத்தில் வாக்குச்சாவடி மையங்களை விழுப்புரம் மாவட்ட மேலிட பார்வையாளர் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் அலுவலர் ராஜலட்சுமி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன். வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் செஞ்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை  விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டு  ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்