பலத்த மழையால் செழித்து வளரும் மக்காச்சோளா பயிர்கள்

தளி பகுதியில் பெய்த பலத்த மழையால் மக்காச்சோளா பயிர்கள் செழித்து வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2021-10-06 17:56 GMT
தளி
தளி பகுதியில் பெய்த பலத்த மழையால் மக்காச்சோளா பயிர்கள் செழித்து வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு, மற்றும் காய்கறிகள் சாகுபடியில் தீவிரம் காட்டினார்கள். தற்போது இரண்டு சுற்று தண்ணீர் நிறைவடைந்து உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் இன்றி இருந்தது. இதனால் பி.ஏ.பி பாசனத்தில் மானாவாரியாக சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஆனால் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு பாசனத்தை கொண்டுள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த வார இறுதியில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது தளி பகுதியில் மழை பெய்தது. இதனால் வாடிய நிலையில் இருந்த மக்காச்சோள பயிர்கள் பசுமைக்கு மாறி வருகிறது. விவசாயிகள் அதை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை கை கொடுத்து உதவினால் மட்டுமே பயிர்கள் காப்பாற்றப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்ற தண்ணீர் வினியோகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து வாரம் ஒரு முறை தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்