பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் வெறிச்சோடின
மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.
திருவெண்காடு:
மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.
மகாளய அமாவாசை
தங்களது முன்னோர்களுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவதை இந்துக்கள் கடைபிடிக்கும் மரபாக உள்ளது. மாதந்தோறும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசை தினத்தில் கடற்கரை, காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்த பலனை பெறலாம் என புராணங்கள் கூறுகின்றன.
அதிலும் குறிப்பாக மகாளயபட்சமான 15 நாட்கள் நம் முன்னோர்கள், நம்முடனேயே தங்குவதாகவும், அதன் காரணமாக அப்போது தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்கள் மகிழ்ந்து, நம்மை வாழ்த்தினால் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் என ஐதீகம்.
கடற்கரை வெறிச்சோடியது
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் மகாளய அமாவாசையொட்டி பூம்புகார் சங்கம துறை பகுதியிலும், மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளிலும் மக்கள் கூடவும், தர்ப்பணம் கொடுக்கவும் கலெக்டர் லலிதா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மகாளய அமாவாசையொட்டி பூம்புகார் கடற்கரை மற்றும் காவிரி கடலோடு கலக்கும் சங்கம துறை ஆகிய இடங்கள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
மேலும் இந்த தடை அறிவிப்பு தெரியாமல் வாகனங்களில் வந்த பக்தர்களை பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், கிராம நிர்வாக அதிகாரி ராஜாமணி மற்றும் போலீசார் தர்ம குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
குறைவான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் காவிரிக்கரை பகுதிகளான வானகிரி, பழைய கரம், மேலையூர் ஆகிய பகுதிகளில் காவிரியில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தரங்கம்பாடி
இதேபோல தரங்கம்பாடி கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரைக்கு வந்த ஒருசில சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும் கடற்கரையோர காவல்படை, பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.