வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் போடும் பணி

கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் போடும் பணி நடைபெற்றது.

Update: 2021-10-06 17:40 GMT
வேதாரண்யம்:
கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் போடும் பணி நடைபெற்றது.
சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து தங்கி செல்வது வழக்கம். தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் ரஷியாவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சிறவி வகைகள் வந்து குவிந்துள்ளன. 
மேலும் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, சிறவி உள்ளிட்ட 50 வகையான பறவைகள் வரத் தொடங்கி உள்ளன.
பறவைகள் காலில் வளையம்
 மும்பை பறவை ஆராய்ச்சி நிலைய பறவை விஞ்ஞானி பாலச்சந்திரன் மற்றும் குழுவினர்  வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடியக்கரை சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை பிடித்து அதன் கால்களில்  தகுந்தார்போல் சிறிய வகை வளையம்  போடப்படுகிறது. பறவையின் இனம், அலகின் நீளம், சிறகின் நீளம், எடை உள்ளிட்டவைகள் குறிக்கப்பட்டு, பின்னர் காலில் வளையம் போடப்பட்டு பறக்க விடப்படுகிறது. 
இந்த பறவை மீண்டும் வெளிநாட்டில் பறவை ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால் காலில் உள்ள வளையத்தின் மூலம் எந்த நாடுகளில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தூரம் வந்துள்ளது என்பது குறித்து அறிவதற்காக  தான் வளையங்கள்  பொருத்தப்படுகிறது என விஞ்ஞானி கூறினார்.

மேலும் செய்திகள்