மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் சாவு

சென்னிமலை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-06 17:24 GMT
சென்னிமலை அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலைத்தேனீக்கள் கொட்டியது
சென்னிமலை அருகே உள்ள  எல்லைக்கிராம ஊராட்சிக்கு உள்பட்டது எல்லைக்குமாரபாளையம். இந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஏரி கரையோரம் நேற்று பகல் 11 மணி அளவில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ராமலிங்கபுரம், எல்லைக்குமாரபாளையம் மற்றும் அம்பேத்கர் காலனியை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 62 பேர் மரம், செடி, கொடிகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இவர்களுடன் ராமலிங்கபுரத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 80) என்பவரும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகே வேப்பமரத்தில் உள்ள தேன்கூட்டில் இருந்து மலைத்தேனீக்கள் கலைந்தது. இதைப்பார்த்ததும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை மலைத்தேனீக்கள் விரட்டி, விரட்டி கொட்டியது.
முதியவர் சாவு
இதில் பழனிசாமியால் ஓட முடியவில்லை. இதனால் அவர் மலைத்தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்குள்ள சுமார் 4 அடி ஆழமுடைய தண்ணீர் நிரம்பியிருந்த குட்டைக்குள் குதித்தார். எனினும் மலைத்தேனீக்கள் அவரை விடாமல் கொட்டியது. இதில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
தேனீக்கள் கொட்டியதில் பழனாள் (75), கோவிந்தம்மாள் (58), வசந்தி (56), சாரதா (52) , சுப்பிரமணி (73), தங்கமுத்து (71) உள்பட  19 பேர் உடலில் வீக்கம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேனீக்கள் கொட்டியதில் உடலில் வீக்கம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவமனைக்கு கொண்டு் போய் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கதறல்
தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த பழனிசாமிக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்