‘பசுமை வளங்களை காக்க மரங்களை தத்தெடுங்கள்’

பசுமை வளங்களை காக்க மரங்களை தத்தெடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காரைக்கால் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-10-06 16:49 GMT
காரைக்கால், அக்.-
பசுமை வளங்களை காக்க மரங்களை தத்தெடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காரைக்கால் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காடு வளர்ப்பு
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மக்கள் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்க உத்தேசித்துள்ளது. 
காரைக்கால் மக்கள் அனைவரும் பசுமை வளங்கள் மற்றும் மரங்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அதிகபட்ச மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
ஒரு மரத்தை நடுதல் அல்லது தத்தெடுப்பதன் மூலம், நீங்கள் மாவட்டத்தின் காடு வளர்ப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கிறீர்கள், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கிறீர்கள். மக்களுக்கான சூழலை மேம்படுத்த உதவுகிறீர்கள்.
மரக்கன்றுகளை பரிசளிக்கலாம்
அரசு துறைகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்குபெறும் முக்கியஸ்தர்களுக்கு வரவேற்பு அளிக்க, பொன்னாடைகள் மற்றும் பூங்கொத்துகளுக்கு பதிலாக மரக் கன்றுகளை வழங்கி பிரசாரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொதுமக்கள் முக்கியமான நிகழ்வுகளான திருமணம், பிறந்தநாள் போன்ற சுபநிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் பரிசளிப்பதற்கு முன் வரலாம். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்