மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கடலூர் தென்பெண்ணையாற்றில் குவிந்த பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு சென்றவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்

மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் தென்பெண்ணையாற்றில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் சில்வர் பீச்சுக்கு சென்ற மக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

Update: 2021-10-06 16:44 GMT
கடலூர், 

மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு மகாளய அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கடலூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் சில்வர் பீச்சுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. மேலும் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கிள்ளை கடற்கரை, பெண்ணையாறு, கொள்ளிடம், மணிமுக்தாறு போன்ற நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது.

தடையை மீறி சென்ற மக்கள்

இந்நிலையில் மகாளய அமாவாசையான நேற்று தடையை மீறி சிலர் சில்வர் பீச்சுக்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக சென்றனர். அவர்களை அங்கு தடுப்பு கட்டை அமைத்து, போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பிய தேவனாம்பட்டினம் பகுதி மக்களையும் போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகே அனுமதித்தனர்.
வழக்கமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பதால் சில்வர் பீச்சில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த தடை உத்தரவால் நேற்று கடலூர் சில்வர் பீச் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தர்ப்பணம்

இதற்கிடையே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்தனர். அங்கு அவர்கள் காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், அகத்தி கீரை, எள் போன்ற பொருட்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர்.  மாவட்டத்தில் உள்ள  மற்ற ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

சிதம்பரம்

இதேபோல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை 5 மணி முதல் தர்ப்பணம் கொடுக்க நடராஜர் கோவிலுக்கு பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் சிவகங்கை குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும் அமாவாசையை யொட்டி நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகர சாமி நேற்று காலை சிவகங்கை குளத்தில் எழுந்தருளினார். அங்கு அஸ்திர ராஜருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்