மேற்கூரைகள் சேதமான 9 அரசு பஸ்கள் மாற்றம்

ஒழுகும் மழைநீரில் நனைந்தபடி மக்கள் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், மேற்கூரைகள் சேதமான 9 அரசு பஸ்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-10-06 14:35 GMT
ஊட்டி

ஒழுகும் மழைநீரில் நனைந்தபடி மக்கள் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், மேற்கூரைகள் சேதமான 9 அரசு பஸ்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பராமரிப்பின்றி அரசு பஸ்கள்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், மேட்டுப்பாளையம்-2 ஆகிய 6 போக்குவரத்து பணிமனைகள் உள்ளது. இங்கிருந்து கிராமப்புறங்கள் மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களுக்கும், கர்நாடகா மாநிலத்துக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கேரளாவுக்கு அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது.

மலைப்பிரதேசத்தில் குறுகலான சாலைகள் வளைந்து, நெளிந்து செல்வதால் அரசு மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே பல பஸ்களில் மேற்கூரை போதிய பராமரிப்பின்றி உள்ளது. ஊட்டி-காந்தல் இடையே இயக்கப்படும் நகர பஸ்களில் மழையின்போது தண்ணீர் உள்ளே ஒழுகும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

வாக்குவாதம்

இந்தநிலையில் ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் தொடர் மழையின் காரணமாக மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க நின்று கொண்டு சென்றனர். மேலும் சிலர் குடைகளை பிடித்தபடி பயணம் செய்ததை காண முடிந்தது. மேலும் பயணிகள் கண்டக்டர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது. மழைநீர் ஒழுகுவதால் அவதி அடைந்து வருகிறோம். எனவே பஸ்களை சீரமைத்து முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேற்கூரைகளை சரி செய்ய...

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் 9 அரசு பஸ்கள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து 9 பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பஸ்களில் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்