மராட்டியத்தில் 61 கிராமங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மராட்டியத்தில் உள்ள 61 கிராமங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

Update: 2021-10-06 01:23 GMT
கோப்பு படம்
புனே,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1½ ஆண்டு காலத்திற்கு பிறகு பள்ளிகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் அதற்கு தலைகீழாக மராட்டியத்தில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
 
இந்த மாவட்டத்தில் தினமும் 500 முதல் 800 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இதேபோல பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 
தொடர்ந்து அதிகரித்துவரும் பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து அகமதுநகரில் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதன்படி 10-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் அகோலே, கர்ஜத், கோபர்கான், நேவ்சா, பர்நேர், பாதரி, ரகாதா, சங்கம்நேர், சேவ்கான், ஸ்ரீகொண்டா மற்றும் ஸ்ரீராம்பூர் ஆகிய 11 தாலுகாவில் உள்ள 61 கிராமங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா நெறிமுறைகள் இங்கு முறையாக பின்பற்றப்படாத காரணத்தால் நாங்கள் கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். மருந்து கடைகள், கிளினிக்குகள் மற்றும் நோய் தொற்று கண்டறியும் ஆய்வகங்கள் தவிர அனைத்து கடைகளும் 4-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை மூடப்படும். அதேநேரம் இந்த கிராமங்களில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த கிராமங்களுக்கு செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவசர சேவைகள், விவசாய விளைபொருட்களின் போக்குவரத்து, இதர அத்தியாவசிய சேவைகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல மளிகை கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் மூடப்படும். 

இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்