தார்சாலை அமைக்கப்படுமா?
அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையத்தில் மேட்டூர் சாலையை இணைக்கும் முட்புதர் நிறைந்த மண் ரோடு உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த ரோடு சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த ேராட்டில் இரு சக்கர வாகனங்களிலோ அல்லது நடந்தோ செல்ல முடிவதில்லை. எனவே இந்த மண் ரோட்டை தார் சாலையாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன், பள்ளிபாளையம்.
ஆபத்தான பள்ளம்
ஈரோடு பாலாஜி ஆர்கட் கார்னர் பெரியார் காலனி ரோடு அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளத்தை உடனே மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு
குழாய் உடைப்பு
ஈரோடு சாஸ்திரிநகர் கல்யாணசுந்தரம் வீதியில் உப்பு தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கி.சக்திவேல், சாஸ்திரிநகர்.
குடிநீர் வினியோகிக்கப்படுமா?
மொடக்குறிச்சி ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது வெங்கமேடு திருவள்ளுவர் காலனி. இங்கு ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. உடனே குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள், திருவள்ளுவர் காலனி.
தேங்கும் கழிவுநீர்
பி.மேட்டுப்பாளையம் வ.உ.சி. தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பி.மேட்டு்ப்பாளையம்.
ஆடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
பெரிய கொடிவேரி பேரூராட்சி டி.ஜி.புதூர் கெம்பநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் ஆடுகள் நடுரோட்டில் அலைந்து திரிகின்றன. இதனால் அவை ரோட்டில் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கிறது. எனவே ஆடுகள் வளர்ப்போர் அவற்றினை இப்படி அலைய விடக்கூடாது. இனி போக்குவரத்துக்கு இடையூறாக அலைந்து திரியும் ஆடுகளை பிடித்து அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பொதுமக்கள், டி.ஜி.புதூர்
மின்விளக்குகள் தேவை
அத்தாணியில் பவானி ரோட்டில் பழைய மாரப்பா தியேட்டர் அருகே பாலம் உள்ளது. இதன் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பாலத்தில் மின்விளக்குகள் ஏதும் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் பாலம் பகுதியில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். எனவே பாலம் முதல் கைகாட்டி பிரிவு வரை மின் விளக்குகள் அமைத்து தர வேண்டுகிறோம்.
பொதுமக்கள், அத்தாணி.
பாராட்டு
ஈரோடு ரங்கம்பாளையத்தில் இருந்து பெரியசடையம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சி நகர் அருகே நீண்ட நாட்களாக குழி மூடப்படாமல் கிடந்தது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது குழி மூடப்பட்டு்ள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குறிஞ்சி நகர்.