டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் ஒரு மணி நேரத்தில் சிக்கினர்
மதுரையில் நள்ளிரவில் டிரைவரை தாக்கி செல்போனை பறித்த 2 பேர் ஒரு மணி நேரத்தில் சிக்கினர். இதில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.
மதுரை,
மதுரையில் நள்ளிரவில் டிரைவரை தாக்கி செல்போனை பறித்த 2 பேர் ஒரு மணி நேரத்தில் சிக்கினர். இதில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.
டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு
மதுரை டி.வி.எஸ்.நகர், வெங்கடாசலபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47), டிரைவர். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தனர். அதை பார்த்த செந்தில்குமார் அவர்களை பார்த்து நீங்கள் யார்? இந்த நேரத்தில் இங்கு ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் சேர்ந்து பீர் பாட்டிலால் செந்தில்குமாரை தாக்கினார்கள்.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த அதே பகுதிைய சேர்ந்த டிரைவர் பழனிக்குமார் (40) என்பவர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்ட முயன்றார். உடனே அந்த 2 பேரும், பழனிகுமாரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
உடனே செந்தில்குமார் சம்பவம் குறித்து காவல்கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் மூலம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் சிக்கினர்
அப்போது செல்போனை பறித்து சென்ற ஒருவரின் விலைஉயர்ந்த செருப்பு அந்த பகுதியில் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே செருப்பை எடுக்க அவர்கள் வரலாம் என்று நினைத்து அங்கேயே போலீசார் மறைந்து இருந்து காத்திருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அவர்களில் ஒருவரை போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர்.
அதில் ஆண்டாள்புரம் ஒதுவார் மடத்தை சேர்ந்த கிருஷ்ணயோகேஸ்வரன் (21) என்பதும், தப்பி சென்றவர் ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற மதன் (20) என்பதும், அவர்கள் தான் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் சிக்கியவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு கருப்பசாமி உள்ளிட்ட 8 பேர் மது அருந்தி கொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
2 பேர் கைது
அதை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களுக்கு செல்போன் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. அதன்பின்னர் சுப்பிரமணியபுரம் போலீசார் செல்போன் பறிப்பு மற்றும் டிரைவரை தாக்கிய வழக்கில் கிருஷ்ணயோகேஸ்வரன், கருப்பசாமி ஆகியோரை மட்டும் கைது செய்தனர். மற்ற 7 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் இரவு நேரத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார்.